ஒரு சமயம் மகாவிஷ்ணு, சிவபெருமானிடம் தமக்கு சிவசொரூபம் கிடைக்கும்படி அருள வேண்டும் என்று வேண்டினார். சிவன் மறுக்கவே, மகாவிஷ்ணு இத்தலம் வந்து கடுந்தவம் செய்யத் தொடங்கினார். அப்போது அங்கு யாத்திரையாக வந்த திருஞானசம்பந்தர், தவக்கோலத்தில் இருப்பது சிவபெருமான் என்று நினைத்து பதிகம் பாட, அதில் மனம் உருகி, மகாவிஷ்ணு லிங்க வடிவம் பெறத் தொடங்கினார். பாதம் வரையில் வரும்போது பதிகம் முடிந்துவிடவே, பாதம் மட்டும் லிங்கமாக மாறாமல் அப்படியே நின்று விட்டது. அதனால் தற்போதும் லிங்க மூர்த்திக்கு முன் பாத வடிவம் உள்ளது. சம்பந்தரின் பாடலுக்கு உருகியதால் இவர் 'ஓதஉருகீஸ்வரர்' என்ற பெயர் பெற்றார். மற்றொரு மூலவரான திருமேற்றளிநாதர் மேற்கு நோக்கி இருப்பதால் இத்தலம் 'திருக்கச்சி மேற்றளி' என்று அழைக்கப்படுகிறது.
மூலவர் 'திருமேற்றளிநாதர்' அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். மேற்கு பார்த்த சன்னதி. மற்றொரு மூலவரான 'ஓதஉருகீஸ்வரர்' லிங்க மூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சியளிக்கின்றார். காஞ்சிபுரத்தில் 'காமாட்சி' அம்மனுக்கு தனிக் கோயில் உள்ளதால் இங்கு உள்ள எந்த சிவன் கோயிலுக்கும் அம்மன் சன்னதி கிடையாது. ஆனால் இக்கோயிலில் 'பராசக்தி' என்ற பெயரில் அம்மன் சன்னதி ஒன்று உள்ளது.
வழக்கமாக தட்சிணாமூர்த்தியின் காலடியில் வலது பக்கமாக இருக்கும் முயலகன் இத்தலத்தில் இடது பக்கமாக திரும்பியிருக்கிறார்.
சம்பந்தர் இங்கு வரும்போது சிறிது தூரத்தில் இருந்தே பாடியதால் அவருக்கு கோயில் இருக்கும் தெருமுனையில் தனி சன்னதி உள்ளது. சம்பந்தருக்கு ஆளுடையப் பிள்ளையார் என்ற திருநாமமும் உள்ளதால் இப்பகுதி 'பிள்ளையார் பாளையம்' என்று அழைக்கப்படுகிறது.
திருநாவுக்கரசரும், சுந்தரரும் தலா ஒரு பதிகமும் பாடியுள்ளனர். திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் கிடைக்கப் பெறவில்லை.
இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|